• Sun. Jul 21st, 2024

பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

Mar 24, 2022

ஆப்கானில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென மாணவிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, அங்கே தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அங்கே பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அத்துடன் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தாலிபான்கள் அங்கே பொறுப்பேற்றபோது, கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், சிறுவர்கள் மற்றும் 12 வயதிற்குக் கீழே இருக்கும் சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 12 வயதிற்கு மேல் உள்ள மாணவிகள் பள்ளி செல்ல அனுமதி வழங்கவில்லை. பின்னர், ஏழு மாதங்களுக்கு பிறகு தற்போது, ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் கல்வி பயில அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, 12 முதல் 19 வயதுடைய ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளிக்குத் திரும்ப இருப்பதாக தவல்கள் வெளியாயின. அதன்படி நேற்று தலைநகர் காபூல் உட்பட பல மாகாணங்களில் மாணவிகள் பயிலும் மேல்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென மாணவிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். தாலிபான்களின் உத்தரவின் பேரில் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து காபூலில் உள்ள பெண்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், தனது மாணவர்கள் அழுவதையும், வகுப்புகளை விட்டு வெளியே செல்ல தயங்குவதையும் தான் பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், தங்களின் எதிர்காலம் என்னவாகும்? என ஒரு பள்ளி மாணவி கேள்வி எழுப்பியபடி பள்ளியிலிருந்து கண்ணீருடன் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.