• Fri. Jul 26th, 2024

ஆவணி அமாவாசை விரதமிருந்தால் கிட்டும் பலன்கள்

Sep 6, 2021

நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

அமாவாசையான இன்று நாம் விரதம் இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத அமாவாசை தினமான இன்று குளித்து முடித்து, விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் இன்று உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். ஆவணி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது.

இந்த ஆவணி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.