• Tue. Jul 23rd, 2024

இன்று விநாயகர் சதுர்த்தி!

Sep 10, 2021

இன்று ஆவணி சதுர்த்தி தினம். இந்த நாள் இந்துக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் நாளாகும். விநாயகரின் அருளை பெற 21 வகையான இலைகள் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும்.

அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கும் விநாயகருக்கு ஆவணி மாத சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

அனைத்து காரியங்களையும் விநாயகரை வழிபட்டே செய்ய வேண்டும் என்பது இந்துக்களின் ஐதீகம். அந்த வகையில் விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என விநாயகர் புராணம் கூறுகிறது.

மகப்பேறு பெற மருத இலை, எதிரிகளின் தொல்லை நீங்க அரச இலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை, சுகமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ் பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும்.

அதோடு அருகம்புல், செம்பருத்தி, வெள்ளெருக்கு, மாவிலை இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் விநாய பெருமானின் பூரண ஆசியை அடையாலாம் எனவும் சொல்லப்படுகின்றது.

பூஜை பொருட்கள்:

பிள்ளையார், அரிசி, மஞ்சள், மஞ்சள், குங்குமம், சந்தனம், அறுகம்புல்,கற்பூரம்,கணபதிக்கு உடுத்த ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி. பூ, அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு.

நைவேத்திய பொருட்கள் :

வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்கள்

பூஜைக்கு முன் செய்ய வேண்டியவை:

ஒரு பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மீது பிள்ளையார் சிலையை வைக்கவும். அவருக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தால் பொட்டு வைத்து, அதன் மீது குங்கும திலகம் இடுங்கள்.

பிள்ளையார் சிலைக்கு முன் ஒரு பித்தளை தட்டு வைத்து, அதில் சிறிது அரிசியை போட்டு அதன் மீது ஒரு தூய வெற்றிலை வைக்கவும். பின்னர் மஞ்சள் தூளுடன் சிறுது தண்ணீர் ஊற்றி பிள்ளையார் பிடித்து, வெற்றிலை மீது வைக்கவும்.

‘ஓம் கம் கணபதயே நமஹ;’ என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருங்கள்.

விநாயகர் வழிபாடு:

எந்த ஒரு பூஜையை தொடங்கும் முன்னர் கணபதியை வணங்கிவிட்டுத் தான் தொடங்க வேண்டும். பின்னர் குல தெய்வத்தை கும்பிட வேண்டும். விநாயகர் சதுர்த்தியில், நாயகனான கணபதியை வழிபட்டு பூஜையை தொடங்கலாம்.

மந்திரங்கள்:

பிள்ளையாருக்குப் பூஜை, அபிஷேகம் செய்யும் போது விநாயகருக்கு உகந்த மந்திரங்கள், போற்றி பாடலை பாடலாம். பூஜை முடித்த பின்னரும், பிள்ளையாரின் அருகில் அமர்ந்து மந்திரங்கள், விநாயகர் போற்றியைப் பாடலாம்.