• Sat. Apr 13th, 2024

24 -ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

Feb 4, 2022

பாகிஸ்தானுக்கு கடந்த 2009- ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.

கிரிக்கெட் உலகை அதிரவைத்த இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட வெளிநாட்டு அணிகள் தயக்கம் காட்டின.

6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பப்வே அணி பாகிஸ்தான் சென்று விளையாடியது. எனினும், முன்னணி அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடவில்லை.

கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ரத்து செய்வதாக சம்பந்தப்பட்ட நாடுகள் அறிவித்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் பண இழப்பையும் இந்த விவகாரங்கள் ஏற்படுத்தின.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்வது கடந்த 24 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவையாகும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. பிப்ரவரி 27 ஆம் தேதி பாகிஸ்தான் செல்லும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மார்ச் 4 முதல் 8 ஆம் தேதி வரை முதல் டெஸ்டில் விளையாடுகிறது.

இந்தப் போட்டி ராவல் பிண்டியில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் 12-16 ஆம் தேதியிலும், 3-வது டெஸ்ட் லாகூரில் 21-25 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

மார்ச் 29,31,2 ஆகிய தேதிகளில் முறையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி ஒரே ஒரு 20 போட்டிகளில் பங்கேற்கிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தாயகம் திரும்புகிறது.