• Fri. Jul 26th, 2024

டிராவில் முடிந்த இங்கிலாந்து – நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

Jun 7, 2021

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டெவென் கான்வே அதிகபட்சமாக 200 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ராபின்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடியது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் 275 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி வீரர் ராய் பர்ன்ஸ் அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், போட்டியின் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ராய் பெர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி ஆகியோர் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இரு வீரர்களும் நிதினமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். ராய் பர்ன்ஸ் 81 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் வக்னர் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த சக் க்ரவ்லி 2 ரன்னில் வெளியேனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வக்னர் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்துவந்த போப் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ராய் பர்ன்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராய் அரைசதம் கடந்தார். ஆனால், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராய் பர்ன்ஸ் 60 ரன்னிலும், போப் 20 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் 200 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி வீரர் டெவென் கான்வே இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்நிலையில் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்மிங்கமில் உள்ள எட்ச்பேஸ்டோன் மைதானத்தில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.