• Tue. Jul 23rd, 2024

யூரோ கால்பந்து இறுதிப் போட்டி: சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்துமா இங்கிலாந்து?

Jul 11, 2021

யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – இத்தாலி அணிகள் லண்டன் வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன.

யூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து தற்போது தான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் தனது நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு பெரிய ஊக்கத்தை கொடுக்கக் கூடும். இங்கிலாந்து அணி அரை இறுதியில் டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

இந்த ஆட்டத்தின் முடிவு கூடுதல் நேரத்திலேயே கிடைக்கப்பெற்றது. இத்தாலி அணியானது அரை இறுதியில் ஸ்பெயினை தோற்கடித்திருந்தது. இந்த ஆட்டத்தின் முடிவும் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கிடைக்கவில்லை. பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற இத்தாலி அணியானது, 53 வருடங்களுக்குப் பிறகு பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் 55 வருடங்களாக பெரிய அளவிலான தொடரில் கோப்பையை வெல்ல முடியாத வறட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியும். எனினும் அது அவ்வளவு எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத இத்தாலி அணி, உலக அரங்கில் தன்னை புதுப்பித்துக்கொள்ள முயன்று வருகிறது. அந்த அணி விளையாடிய கடைசி 33 ஆட்டங்களிலும் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது.

இதுவரை இங்கிலாந்து – இத்தாலி அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இத்தாலி 11 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன. 8 ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளன. பெரிய அளவிலான தொடர்களில் இதுவரை இங்கிலாந்து அணியிடம் இத்தாலி தோல்வி கண்டது இல்லை.

1980-ம் ஆண்டு யூரோ தொடரில் 1-0 என்ற கணக்கிலும் 1990 மற்றும் 2014 உலகக் கோப்பை தொடரில் தலா 2-1 என்ற கோல் கணக்கிலும் 2012-ம் ஆண்டு யூரோ தொடரில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது இத்தாலி அணி.

இந்நிலையில் சொந்த மண்ணில் இத்தாலியை வீழ்த்தி வெற்றி கொள்ளுமா இங்கிலாந்து அணி? என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.