தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
கிறிஸ்ட்சேர்ச் மைதானத்தில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுபைர் ஹம்சா 25 ஓட்டங்களையும் வெர்ரின்னே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி 7 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, கெய்ல் ஜேமிஸன், நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்;து அணி, 482 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரி நிக்கோல்ஸ் 105 ஓட்டங்களையும் டொம் பிளென்டல் 96 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஒலிவியர் 3 விக்கெட்டுகளையும் ரபாடா, மார்கோ ஜென்சன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளென்டன் ஸ்டூர்மேன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 387 ஓட்டங்கள் பின்னிலையின் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 41 ஓட்டங்களையும் கைல் வெர்ரைன் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 5 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீஸன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மெட் ஹென்ரி தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 25ஆம் திகதி இதே கிறிஸ்ட்சேர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.