• Wed. Jun 19th, 2024

நம் நாட்டிலேயே நிறவெறி பாகுபாடு- மனம் திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

Nov 30, 2021

சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதை முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் எல்.சிவராம கிருஷ்ணன் மனம் திறந்து கொட்டியுள்ளார்.

நிறவெறி என்பது இன்னமும் சமூகத்தில் பல ரூபங்களில் இருக்கவே செய்கிறது.

வெள்ளை நிறமே அழகு என்பது போன்ற மாயை காலங்காலமாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் போராடினர்.

இன்றும் கருப்பினத்தவர்கள் தங்களை எதிர்த்து நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர், செயல்பூர்வமாக இருந்து வருகின்றனர்.

ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை அடுத்து, இனவெறிக்கு எதிராக பகிரங்கமாக குரல் எழுப்பும் வளர்ந்து வரும் விளையாட்டுப் பிரமுகர்களுடன் இணைந்து செயல்படும் முதல் வீரர்களில், மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் டேரன் சமி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் அடங்குவர்.

சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையில் போட்டியில் கூட, அனைத்து அணிகளின் வீரர்களும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு உறுதி எடுத்துக்கொண்டனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாக நிறவெறி என்பது, மிகப்பெரிய விஷயமாக மாறி கண்டிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் யார்க் ஷயர் கிரிக்கெட் அசிம் ரபிக் என்பவர் புயலைக் கிளப்பினார். இதில் மைக்கேல் வாகன் உட்பட பல இங்கிலாந்து வீரர்களின் நடத்தை வெளியானது.

இப்போது சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதை முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் எல்.சிவராம கிருஷ்ணன் மனம் திறந்து கொட்டியுள்ளார்.

இதுகுறித்து ஒரு டுவிட்டில் பதில் அளித்துள்ள சிவராம கிருஷ்ணன் வாழ்நாள் முழுவதும் நான் விமர்சிக்கப்படுகிறேன் மற்றும் நிற பாகுபாடு காட்டப்பட்டேன். இது துரதிஷ்டவசமாக நம் நாட்டிலேயே நடக்கிறது என கூறி உள்ளார்.

நிற பாகுபாடு குறித்து பகிரங்கமாக பேசிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் அல்ல. கடைசியாக 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய தொடக்க வீரர் அபினவ் முகுந்த், கடந்த காலங்களில் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணிக்காக தொடக்க வீரராக ஆடிய அபினவ் முகுந்த், “இந்தியாவுக்கு வெளியேயேும், உள்ளேயும் என்னுடைய 15 வயதிலிருந்து அதிகமாகப் பயணித்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருந்து என் நிறத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் ஒருவிதமான எண்ணம் எனக்கு புதிராகவே இருந்தது.

வெயில் காலத்திலும் வெயில் இல்லாத நேரத்திலும் நான் பயிற்சியில் இருந்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன், நான் ஒருமுறை கூட வெயிலில் விளையாடியதற்காக என் தோல் நிறம் குறைந்துவிட்டதாக வருத்தப்பட்டதில்லை.

நான் என்ன செய்கிறேனோ அதை விரும்பிச் செய்பவன். நாட்டிலேயே அதிகமான வெப்பமான பகுதியான சென்னையிலிருந்து வந்தேன். என்னுடைய இளமைக்கால வாழ்க்கையின் பெரும்பகுதி கிரிக்கெட் மைதானத்திலேயே செலவிட்டேன்” என்று கூறி உள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் பல கருப்பரின வீரர்கள் ஆடியுள்ளனர், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மகாயா நிடினி, ஸ்பின்னர் பால் ஆடம்ஸ், விக்கெட் கீப்பர் சோலகிளி, ஆஷ்வெல் பிரின்ஸ், பிலாண்டர் உள்ளிட்ட வீரர்கள் அணிக்குள்ளேயே வேறு விதமாக நடத்தப்பட்ட கதையும் இப்போது அம்பலமாகியுள்ளது.

ஒன்றாக விளையாடுவார்கள், எல்லாம் செய்வார்கள், அணி பயணிக்கும் பேருந்தில் ஒன்றாக அமர மாட்டார்கள். ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள் என நிடினி கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.