உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பத்திரமாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய துணை தூதரகத்திற்கு மாநிலங்களவை எம்.பி., புதுக்கோட்டை அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் நடக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. இதனையடுத்து உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதில் தமிழகத்தை சேர்ந்த 1,000 பேர் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பலர் மருத்துவம், பொறியியில் போன்ற படிப்புகளை படிப்பதற்காக சென்ற மாணவர்கள் மற்றும் சிலர் வேலைக்காகவும் சென்றவர்கள் உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தினருக்கு மாநிலங்களவை எம்.பி.யும், தி.மு.க. அயலக அணியின் இணை செயலாளருமான புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இருந்து உக்ரைன் சென்றவர்களின் விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அப்துல்லா கூறினார்.