• Sat. Apr 20th, 2024

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா – கடுமையான ஊரடங்கு

Feb 1, 2022

சீன தலைநகர் பீஜிங்கில் வார இறுதியில் 23 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பீஜிங் நகரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியை அதிகாரிகள் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

2.26 மில்லியன் மக்கள் வசிக்கும் Fengtai மாவட்டம் மற்றும் 68,000 பேர்கள் குடியிருக்கும் Anzhenli பகுதி உள்ளிட்டவையே தற்போது கடுமையான ஊரடங்கில் சிக்கியுள்ளவை. இங்குள்ள மக்கள் அதிகாரிகளின் அனுமதியின்றி குடியிருப்புகளை விட்டு வெளியேற அனுமதி இல்லை என்பது மட்டுமின்றி, நாளும் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பீஜிங் அருகே தென்மேற்கில் அமைந்துள்ள Xiong’an பகுதியில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு உபடுத்தப்பட்ட சில நாட்களில், குறிப்பிட்ட இரு பகுதி மக்களையும் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும், பீஜிங் நகரத்தில் அமைந்துள்ள இரு பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பொது அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் மர்மமான முறையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பீஜிங் நிர்வாகத்தின் இந்த இரகசிய நடவடிக்கை குடியிருப்பாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 23 முதல் பீஜிங் நகரில் மொத்தம் 176 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவுடன் ஆரம்பமாக உள்ளது. விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் உரிய சோதனைகள் தவறாமல் முன்னெடுக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்தும் வருகின்றனர்.

மார்ச் 2020 முதல் சர்வதேச பயணிகள் யாரும் சீனாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை, மேலும் போக்குவரத்துக்காக சில விமான நிலையங்களுக்கு மட்டுமே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.