ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்புமருந்துகளை பயன்படுத்துவதால் அரிய இதய வீக்கம் ஏற்படலாம் எனும் புதிய எச்சரிக்கைக் குறிப்பை மருந்தின் விவரங்களில் FDA சேர்த்துள்ளது. தடுப்புமருந்துகள் குறித்து, சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிறுவனங்களுக்கு (U.S. Vaccine Adverse Event Reporting System) வழங்கப்படும் மருந்தின் விவரங்களில் அந்த எச்சரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 300 மில்லியன் Pfizer-BionTech மற்றும் Moderna தடுப்புமருந்துகள் போடப்பட்டுள்ளன. அந்த இரண்டு தடுப்புமருந்துகளும், mRNA தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இம்மாதம் 11-ஆம் திகதி நிலவரப்படி, இந்த இரண்டு தடுப்பூசிகளைப் பெற்ற 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் Myocarditis அல்லது Pericarditis எனப்படும் அரிய இதய வீக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இளம் வயது ஆண்களே பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. 30 வயதுக்கும் குறைவானோரில், சுமார் 310 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 295 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், அமெரிக்கா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் இதய வீக்கம் குறித்து விசாரணை நடத்திவருகின்றன.