தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் டெல்டா ப்ளஸ் வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான டெல்டா ப்ளஸ் வேகமாக பரவிவருகிறது. நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகக்கில் 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. 2ஆவது அலை மோசமாக டெல்டா வைரஸ் காரணம் என சொல்லப்பட்ட நிலையில், டெல்டா ப்ளஸ் வைரஸால் 3ஆவது அலை ஏற்படக்கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இதுவரை பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்களில் , டெல்டா வைரஸ் தான் வேகமாக பரவும் சக்தி உடையதாக கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் இந்த வைரஸ் வேகமாக பரவுவதாக தெரியவந்துள்ளது.
இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் விரைவில் டெல்டா ப்ளஸ் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனவே மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.