சூலை 27 கிரிகோரியன் ஆண்டின் 208 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 209 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 157 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது.
1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது.
1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர்.
1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது.
1663 – அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட வேண்டும் என்ற சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிணைப்பின் பின்னர் இசுக்கொட்லாந்தும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
1794 – பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.
1816 – நேக்ரோ கோட்டை (இன்றைய புளோரிடாவில்) சமரில் அமெரிக்கக் கடற்படை பீரங்கிக் குண்டு ஒன்றை ஏவியதில் 275 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் ஒரேயொரு பீரங்கி வெடிப்பில் அதிகளவு இழப்புகள் நேர்ந்த நிகழ்வாகும்.
1862 – சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த “கோல்டன் கேட்” என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் உயிரிழந்தனர்.
1880 – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரை வென்றனர்.
1890 – இடச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களின் பின்னர் இறந்தார்.
1919 – சிகாகோவில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர்.
1921 – இயக்குநீர் இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
1929 – போர்க்கைதிகள் தொடர்பான ஜெனீவா உடன்பாட்டில் 53 நாடுகள் கையெழுத்திட்டன.
1942 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகள் எகிப்தில் அச்சு நாடுகளின் இறுதி முன்னகர்வை வெற்றிகரமாகத் தடுத்தன.
1953 – கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.
1955 – ஆஸ்திரியாவில் 1945 மே முதல் நிலை கொண்டிருந்த நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.
1955 – இலண்டனில் இருந்து இசுதான்புல் சென்று கொண்டிருந்த ‘எல் அல்’ விமானம் பல்கேரியாவின் வான் பரப்பில் இரண்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அனைத்து 58 பயணிகளும் உயிரிழந்தனர்.
1955 – மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1964 – வியட்நாம் போர்: அமெரிக்கா மேலும் 5,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமிற்கு அனுப்பியது.
1975 – விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981 – மெக்சிக்கோவில் டிசி-9 ரக விமானம் ஒன்று தரையிறங்குகையில், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில்னாதில் பயணம் செய்த 66 பேரில் 32 பேர் உயிரிழந்தனர்.
1983 – கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
1989 – கொரிய விமானம் திரிப்பொலி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதியதில் விமானத்தில் இருந்த 199 பேரில் 75 பேரும் தரையில் நால்வரும் உயிரிழந்தனர்.
1990 – பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 – திரினிடாட் டொபாகோவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.
1996 – அமெரிக்கா, அட்லான்டாவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது குண்டு ஒன்று வெடித்தது.
1997 – அல்சீரியாவில் “சி செரூக்” என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2002 – உக்ரைனின் லிவீவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.
2015 – இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாசுபூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.