• Sat. Mar 23rd, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 29

Jul 29, 2021

சூலை 29 கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது.

238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான்.

1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார்.

1018 – மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார்.

1030 – தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார்.

1148 – சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.

1567 – ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார்.

1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஆங்கிலேயக் கடற்படையினர் சேர் பிரான்சிஸ் டிரேக் தலைமையில் பிரான்சில் கிரேவ்லைன்சு என்ற இடத்தில் எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பை முறியடித்தனர்.

1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற “ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை” வெளியிட்டார்.

1848 – இலங்கையில் பிரித்தானியக் குடியேற்றத்துக்கெதிராக மாத்தளையில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க கிளர்ச்சியாளர்களுடன் இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர்.

1848 – அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்: அயர்லாந்தில் டிப்பெரரி என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.

1900 – இத்தாலியில், முதலாம் உம்பெர்த்தோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.

1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.

1921 – இட்லர் செருமன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள்: 14-வது ஒலிம்பிக் விளையாட்டுகள்: இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.

1950 – கொரியப் போர்: நான்கு நாட்களாக நோகன் ரி என்ற இடத்தில் நடந்த அமெரிக்க வான்தாக்குதல்களில் பெருந்தொகையான தென் கொரிய அகதிகள் கொல்லப்பட்டனர்.

1957 – பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமைக்கப்படட்து.

1958 – ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1959 – அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.

1967 – வியட்நாம் போர்: வட வியட்நாம் கரையில் பொரெஸ்டல் என்ற அமெரிக்கக் கப்பலில் தீப்பிடித்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.

1967 – வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.

1973 – கிரேக்கத்தில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.

1980 – ஈரானியப் புரட்சியை அடுத்து ஈரான் புதிய புனித நாட்டுக்கொடியை அறிமுகப்படுத்தியது.

1981 – இலண்டன் புனித பவுல் பேராலயத்தில் நடைபெற்ற வேல்சு இளவரசர் சார்லசு-டயானா திருமணத்தை உலகத் தொலைக்காட்சிகளில் 700 மில்லியன் பேர் பார்வையிட்டனர்.

1987 – ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் மார்கரட் தாட்சரும், பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானும் கையெழுத்திட்டனர்.

1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது ராஜீவ் காந்தி இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.

1999 – இலங்கையின் வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

2005 – ஏரிசு குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

2010 – காங்கோவில் கசாய் ஆற்றில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.

2013 – சுவிட்சர்லாந்தில் லோசான் அருகே இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்தனர்.

2015 – மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசு 10 இயக்குதளத்தை வெளியிட்டது.