• Fri. Jul 19th, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 18

Nov 18, 2021

நவம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

326 – பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது.

401 – விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர்.

1105 – மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1180 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1210 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால் நீக்கப்பட்டார்.

1421 – நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,

1493 – கிறித்தோபர் கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.

1494 – பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார்.

1626 – புதிய புனித பேதுரு பேராலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

1730 – பின்னாளைய புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் அரச மன்னிப்புப் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1803 – எயித்தியப் புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயித்தியக் குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.

1809 – நெப்போலியப் போர்கள்: வங்காள விரிகுடாவில் இடம்பெற்ற கடற்படைச் சமரில் பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளை வென்றது.

1863 – தென்மார்க்கின் ஒன்பதாம் கிறித்தியான் சிலெசுவிக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் செருமனி-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.

1872 – சூசன் பிரவுன் அந்தோனியும் மேலும் 14 பெண்களும் அமெரிக்க அரசுத்தேர்தலில் வாக்களித்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.

1883 – கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரவலயங்களை வகுத்துக் கொண்டன.

1903 – பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

1905 – டென்மார்க் இளவரசர் கார்ல் நோர்வே மன்னராக ஏழாம் ஆக்கொன் என்ற பெயரில் முடிசூடினார்.

1909 – நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க் கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.

1918 – லாத்வியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1926 – ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.

1928 – வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட அசையும் கேலித் திரைப்படம் நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே மிக்கி மவுசின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது.

1929 – அத்திலாந்திக் பெருங்கடலில் நியூபவுண்ட்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேதம் எற்பட்டது. 28 பேர் உயிரிழந்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: முசோலினியின் கிரேக்க-இத்தாலியப் போரில் ஏற்பட்ட தோல்வியைப் பற்றி விவாதிக்க இட்லரும் இத்தாலிய வெளியுறவு அமைச்சரும் சந்தித்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 440 போர் விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் பிரித்தானியா 9 வானூர்திகளையும் 53 விமானிகளையும் இழந்தது.

1947 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் உயிரிழந்தனர்.

1949 – நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர்.

1961 – அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி 18,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமுக்கு அனுப்பினார்.

1963 – முதலாவது தள்ளு-குமிழ் தொலைபேசி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

1971 – ஓமான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.

1987 – லண்டனில் கிங் க்ரொஸ் பாதாளத் தொடருந்து நிலையத்தில் தீ பரவியதில் 31 பேர் உயிரிழந்தனர்.

1988 – அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் ஒப்புதல் அளித்தார்.

1989 – கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1993 – தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மை ஆட்சிக்கு முடிவு ஏற்பட வழிவகுத்த புதிய அரசியலைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் இணைந்து ஒப்புதல் அளித்தன.

1996 – பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு கால்வாய் சுரங்கம் வழியாகச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் பலர் காயமடைந்தனர்.

2006 – ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.

2013 – அமெரிக்காவின் நாசா நிறுவனம் மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.