• Wed. Apr 17th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 14

Oct 14, 2021

அக்டோபர் 14 கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர்.

1322 – இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார்.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1586 – இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தபட்டார்.

1758 – ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா புருசியாவை ஆக்கிக்ர்க் என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டது.

1773 – உலகின் முதலாவது கல்வி அமைச்சு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் அமைக்கப்பட்டது.

1773 – அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தேயிலைக் கப்பல்கள் பல அனாபொலிசு துறைமுகத்தில் எரிக்கப்பட்டன.

1808 – ரகுசா குடியரசு பிரான்சுடன் இணைக்கப்பட்டது.

1898 – இங்கிலாந்து, கோர்ன்வால் அருகே மொகெகன் என்ற நீராவிக் கப்பல் கவிழ்ந்ததில் 106 பேர் உயிரிழந்தனர்.

1903 – யாழ்ப்பாணத்தின் ஜாஃப்னா என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டது.

1912 – அமெரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் மில்வாக்கியில் பரப்புரை நடத்திய போது, மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுடப்பட்டார்.

1913 – ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் உயிரிழந்தனர்,

1915 – முதலாம் உலகப் போர்: பல்காரியா மைய நாடுகளுடன் இணைந்து போரில் குதித்தது.

1933 – நாட்சி ஜெர்மனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் ரோயல் ஓக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இலண்டன் பிளிட்சு குண்டுவீச்சுகளின் போது பாலம் தொடருந்து நிலையத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தின் ஏதென்சு நகரம் பிரித்தானிய இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. வேர்மாக்ட் படைகள் வெளியேறின.

1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இடம்பெற்ற இட்லரின் படுகொலை முயற்சி தொடர்பாக இராணுவ அதிகாரி இர்வின் ரோமெல் கட்டாயமாகத் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டு இறந்தார்.

1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1949 – அமெரிக்கக் கூட்டரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 11 தலைவர்கள் மீது ஒன்பது மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கை அடுத்து அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

1949 – சீன உள்நாட்டுப் போர்: சீனக் கம்யூனிசப் படைகள் குவாங்சௌ நகரைக் கைப்பற்றின.

1956 – இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.

1957 – எசுப்பானியாவின் வாலேன்சியா நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கில் 81 பேர் உயிரிழந்தனர்.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது: கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.

1964 – மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1964 – லியொனீது பிரெசுனேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். நிக்கித்தா குருசேவ் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.

1968 – மேற்கு ஆஸ்திரேலியாவில் 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20–28 பேர் உயிரிழந்தனர்.

1968 – விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புவியைச் சுற்றுவது ஒளிபரப்பபட்டது.

1973 – தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.

1983 – கிரெனடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் மோரிசு பிசொப் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.

1987 – டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்ட நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.

1991 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1994 – பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத், இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், வெளியுறவுத் துறை அமைச்சர் சிமோன் பெரெஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2014 – நேபாளத்தைத் தாக்கிய ஊத் ஊத் புயலினால் பனிப்புயல் ஏற்பட்டதில் 43 பேர் உயிரிழந்தனர்.

2017 – சோமாலியாவில் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பில் 358 பேர் கொல்லப்பட்டனர், 400 பேர் காயமடைந்தனர்.