• Tue. Jul 23rd, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 4

Sep 4, 2021

செப்டம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 247 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 248 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 118 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

476 – கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது.

626 – சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார்.

929 – சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர்.

1282 – அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார்.

1666 – இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.

1774 – ஜேம்ஸ் குக்கின் இரண்டாவது பயணத்தில் நியூ கலிடோனியா முதல்தடவையாக ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் 44 எசுப்பானியக் குடியேறிகளால் அமைக்கப்பட்டது.

1800 – மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டை முற்றுகையின் போது கோட்டை தீக்கிரையாக்கப்பட்டது.

1870 – பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். பிரெஞ்சு மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.

1884 – குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.

1886 – 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவர் யெரொனீமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தார்.

1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஈஸ்ட்மேன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.

1912 – உதுமானியப் பேரரசு அல்பேனியக் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியதை அடுத்து கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

1919 – துருக்கிக் குடியரசை அமைத்த முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியா, திரேசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மாநாடு கூட்டினார்.

1923 – அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வான்கப்பல் செனான்டோ சேவைக்கு விடப்பட்டது.

1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய வான்படையின் முதல் தாக்குதல் இடம்பெற்றது.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் கிரீர் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை விடுவித்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.

1948 – நெதர்லாந்தின் அரசி விலெல்மினா சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து விலகினார்.

1951 – கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி யப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.

1963 – சுவிட்சர்லாந்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் உயிரிழந்தனர்.

1970 – சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவரானார்.

1971 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஜூனோ அருகில் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் உயிரிழந்தனர்.

1972 – மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1975 – அரபு-இசுரேல் முரண்பாடு குறித்த சினாய் இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டது.

1985 – கரிமத்தின் முதலாவது புலரின் மூலக்கூறு பக்மின்ஸ்டர்ஃபுலரின் கண்டுபிடிக்கப்பட்டது.

1989 – கிழக்கு செருமனியின் லைப்சிக் நகரில் மக்களாட்சி சீர்திருத்தத்திற்கு ஆதரவான முதலாவது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1996 – போதைப்பொருளுக்கு எதிரான போர்: கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை கொலம்பிய இராணுவத் தளம் மீது தாக்குதலை நடத்தியது. மூன்று வார கரந்தடிப் போரில் குறைந்தது 130 கொலம்பியர்கல் கொல்லப்பட்டனர்.

1998 – இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

2006 – இசுரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

2007 – சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

2010 – நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இடம்பெற்ற 7.1 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.