• Fri. Mar 22nd, 2024

இன்று உலக காண்டாமிருகங்கள் தினம்; அறிய வேண்டிய அரிய தகவல்கள் 25

Sep 22, 2021

காண்டாமிருகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி அன்று உலக காண்டாமிருக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காண்டாமிருகங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய 25 தகவல்கள்.

அவையாவன,

  1. உலக காண்டாமிருக தினமானது 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் அறிவிக்கப்பட்டது.
  2. வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ள காண்டாமிருகம், தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
  3. கருப்பு, வெள்ளை, ஒற்றைக் கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா என காண்டாமிருகங்களில் 5 வகைகள் உள்ளன.
  4. இந்தியாவில் வாழும் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை ஆகும். ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகள் உண்டு.
  5. நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்த பெரிய உயிரினம் காண்டாமிருகங்கள்தான்.
  6. அனைத்து வகை காண்டாமிருகங்களுமே 1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவை.
  7. ஆப்ரிக்காவில் வாழும் வெள்ளைக் காண்டாமிருகங்கள் 2,300 கிலோவும், இந்திய காண்டாமிருகம் 2,200 கிலோவும் எடை கொண்டவை.
  8. காண்டாமிருகம் 6 அடி உயரம் வரை வளரும்.
  9. இந்தியாவில் 2,700 காண்டாமிருகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  10. உலகளவில் தந்தத்துக்கு நிகரான விலை கிடைப்பதால் கொம்புக்காக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன. இதனால் அவற்றின் இனம் அழியும் நிலையில் உள்ளது.
  11. காண்டாமிருகங்கள் சராசரியாக 40 முதல் 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.
  12. காண்டாமிருகத்தின் கர்ப்பக் காலம் 15 முதல் 16 மாதங்கள்.
  13. பெண் காண்டாமிருகம் இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும்.
  14. பிறந்த காண்டாமிருகம் கன்றானது 40 முதல் 64 கிலோ வரை எடை இருக்கும்.
  15. ஒரு பிரசவத்தில் ஒரு கன்று மட்டுமே பிறக்கும். அரிதாக 2 கன்றுகள் வரை ஈன்றெடுக்கும்.
  16. தாய் காண்டாமிருகங்கள் 2 முதல் 4 வருடங்கள் குட்டியை தன் கூடவே அழைத்துச் செல்லும்.
  17. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 5,00,000 காண்டாமிருகங்கள் இருந்தன. தற்போது உலக அளவில் 29,000 காண்டாமிருகங்களே இருக்கின்றன.
  18. காண்டாமிருகத்தின் தோல் 1.5 முதல் 5 செ.மீ. வரை தடிமனாக இருக்கும்.
  19. மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை ஓடும் ஆற்றல் காண்டாமிருகத்துக்கு உண்டு.
  20. காண்டாமிருகம் மூர்க்கத்தனமாக தாக்கும் தன்மைக் கொண்டவை. எதிரிகளை கொம்பினாலேயே தாக்கும்.
  21. தாவர உண்ணியான காண்டாமிருகங்கள் பசுமையான இலை தழைகளை, புற்களை விரும்பி உண்ணும்.
  22. ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு முன் பற்கள் கிடையாது. முன் கடைவாய்ப் பற்களைக் கொண்டே உணவை மென்று தின்னும்.
  23. காண்டாமிருகத்தின் மூளை மிகவும் சிறியது. 400 முதல் 600 கிராம் எடை கொண்டது.
  24. இந்தியாவில் தற்போது அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில எண்ணிக்கையில் உள்ளன.
  25. உலகத்தில் உள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு அசாம் மாநிலத்தில் உள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் மட்டுமே உள்ளன.
  26. காண்டாமிருகத்தின் கொம்பின் நீளம் 10 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை காணப்படுகிறது. கொம்புகள் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு ஆயுதமாக செயல்படும். மேலும் உணவைத் தேடி அலையும்போது மண்ணை தோண்டுவதற்கும், புல் பூண்டு, கிழங்குகளை மண்ணுக்கு அடியில் தேடவும் பயன்படுகிறது.