உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட சாதனையை பாரதிய ஜனதா நிகழ்த்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
தொடக்கம் முதலே பெருவாரியான தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். நேரம் செல்ல, செல்ல பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 267 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றது.
அந்த மாநிலத்தில் அறுதி பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை உறுதி செய்தது.
அந்த மாநிலத்தின் கோரக்பூர் நகர்ப்புற தொகுதியில் போட்டியிட்ட மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், தம்மை அடுத்து வந்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுப்கவாதி உபேந்திர தத் சுக்லாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி கண்டார்.
இதே போல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவர் போட்டியிட்ட கார்கால் தொகுதியில் வெற்றி கண்டுள்ளார்.
அந்த மாநிலத்தில் அறுதி பெரும்பான்மை தேவையான 202 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளதால், பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி கண்ட சமாஜ்வாதி, இந்த முறை 138 தொகுதிகளில் முன்னிலை கண்டு பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர உள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சி, அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் நிகழ்வு 37 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தேர்தலில் நடைபெற்றுள்ளது.
பா.ஜ.க நிகழ்த்தி உள்ள தொடர் வெற்றியை அடுத்து அந்த கட்சியின் தொண்டர்கள் பல்வேறு ஊர்களில் வெற்றிக் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் ஹோலி பண்டிகை முன்னதாகவே தொடங்கி விட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி, பாஜகவின் வெற்றியை உறுதி செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர், பாஜக அரசு மீதான மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி காண்பிப்பதாக குறிப்பிட்டார்.
கோவா தேர்தல் முடிவு தொடர்பாக வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யானதாக குறிப்பிட்ட பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக ஒரு முதலமைச்சர் தொடர்ந்து 2வது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், 2022 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கூறினார்.