
ஓவியர் இளையராஜாவின் மரணம், ஓவியக் கலைஞர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருகிறது.
தத்துரூபமான ஓவியங்களை வரைவதில் புகழ்பெற்றவர் இளையராஜா. அவரது ஓவியங்களை இரசிப்பதற்கென்று பெரிய இரசிகர்கள் படையே உண்டு.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இயற்கைக் காட்சிகள், கடவுள் சிலைகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை அப்படியே கண்முன் துல்லியமாகக் காட்சியாக்குவதில் வல்லவர் இளையராஜா.
கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், அங்குள்ள கவின்கலைக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் முன்னணி இதழ்களில் தொடர்ந்து வரைந்துகொண்டிருந்த இளையராஜா, தனது ஓவியங்களுக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் 45 வயதைக் கூட முழுதாக எட்டிப்பிடிக்காத இளையராஜா, கொரோனா தொற்றால் மரணமடைந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வாரம் அதிக சளி தொல்லைக்கு ஆளான இளையராஜா, அதை அலட்சியம் செய்ததோடு, அது சாதாரண ஜலதோஷம் என்று நினைத்து, தானாகவே மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டாராம். அதனால்தான், அவருக்கு ஏற்பட்ட தொற்று, தீவிரமாக ஆகிவிட்டது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
நோய்த் தொற்று தீவிரமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவினார். ஓவியர் இளைராஜா மறைந்தாலும், அவர் வரைந்த ஓவியங்கள் நம்மிடையே சுவாசித்துக் கொண்டுதான் இருக்கும்.