• Thu. Nov 21st, 2024

ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை

Feb 17, 2022

தற்போது, மக்களின் வாழ்வின் பிளாஸ்டிக் ஒரு அங்கமாகிவிட்டது. சந்தையில் இருந்து பொருட்களை கொண்டு வருவது முதல் பேக்கிங் பொருட்கள் வரை மக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘2021 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை 2022 ஜூலை 1-ம் தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

உதாரணமாக, பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் க்ரீம் கப்புகள், ஸ்ட்ரா, ஸ்பூன் போன்றவையும் இந்த தடையில் அடங்கும்.

இவை தவிர, பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்கள் ஆகியவையும் அடங்கும்.

ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வரும் உத்தரவுக்கு முன்னதாக அதாவது ஜூன் 30-ம் தேதிக்குள் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்குகளில் உள்ள விற்பனை கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு மேற்கண்ட பொருள்களை கையிருப்பு வைத்து இருந்தாலோ, விநியோகம் செய்தாலோ சோதனை செய்யும்போது பிடிபட்டால் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.