• Thu. Mar 28th, 2024

5 வயது மகளுக்கு செல்போன் ; குதிரை வண்டி மேளதாளத்துடன் கொண்டாட்டம்

Dec 22, 2021

தனது 5 வயது மகளுக்கு செல்போன் வாங்கியதை டீக்கடைக்காரர் அலகரிக்கப்பட்ட குதிரை வண்டியுடனும், மேளதாளத்துடனும் கொண்டாடினார்.

மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முராரி குஷ்வாஹா. டீக்கடைக்காரரான இவருக்கு 5 வயது மகள் உள்பட 3 குழந்தைகள் உள்ளன. முராரி அவரது மனைவி என குடும்பத்தின் யாரிடமும் செல்போன் கிடையாது.

இதற்கிடையில், தனக்கு செல்போன் வேண்டும் என முராரியின் 5 வயது மகள் நீண்ட நாட்களாக தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், நிதி நிலைமையை கருதி செல்போன் வாங்காமலேயே முராரி காலம் கடத்தி வந்தார்.

இந்நிலையில், தனது சேமிப்பை கொண்டு தனது மகளின் எண்ணத்தை நிறைவேற்றவும், தனது குடும்ப பயனுக்காகவும் முராரி கடந்த திங்கட்கிழமை செல்போன் ஒன்றை வாங்கினார்.

12,500 ரூபாய் மதிப்பிலான செல்போனை முராரி வாங்கினார். தனது மகளின் ஆசையான செல்போனை வாங்கிக்கொடுத்த முராரி அதை பிரம்பாண்டமாக கொண்டாட விரும்பினார்.

இதற்காக, முராரி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியை வாடகைக்கு எடுத்தார். அதில் தனது மகள் உள்பட 3 குழந்தைகளையும் அமர வைத்தார்.

அந்த குதிரை வண்டிக்கு முன்னே மேளதாளங்களை இசைக்க இசைக்கலைஞர்களை அழைத்து வந்தார்.

இசைக்கலைஞர்கள் மேளதாளங்களை இசைக்க குதிரை வண்டியில் தனது குழந்தைகளை அமர வைத்து புதிதாக வாங்கிய செல்போனை தனது மகளின் கையில் கொடுத்து செல்போன் வாங்கிய கடையில் இருந்து தனது வீடு வரை முராரி அழைத்து வந்தார்.

தனது குடும்பத்திற்கு முதல் முறையாக செல்போன் வாங்கியதையும், தனது மகளின் ஆசை நிறைவேறியதையும் கொண்டும் வகையிலேயே இந்த வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக முராரி கூறினார்.

இந்த கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலானது.