• Sun. Dec 22nd, 2024

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா ; கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஜனாதிபதி

Aug 2, 2021

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார் .

அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சென்னை வந்ததும் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

சட்டமன்ற நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜார்ஜ் கோட்டை வந்தடைந்தார் . ஜார்ஜ் கோட்டைக்கு வந்த ஜனாதிபதியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சபாநாயகர் அப்பாவு, வரவேற்புரை வழங்கினார்.

தமிழ் மக்களின் சார்பாக குடியரசுத் தலைவரை வரவேற்கிறேன் என சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு ஜனாதிபதியை வரவேற்றார்.

மேலும் அவர் பேசும் போது வழக்கறிஞராக இருந்தபோது ஏழை மக்களுக்காக போராடிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைப்பது சிறப்பு வாய்ந்தது.சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி என கூறினார்.

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார் .

யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது; படத்திற்குக் கீழே ’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கே.ராஜன் எழுதிய “early writing system a journey from graffiti to brahmi” என்ற புத்தகத்தை பரிசளித்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் இதன்போது முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய ராஜேந்திர சோழன் புத்தகத்தை பரிசளித்தார் சபாநாயகர் அப்பாவு.