தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு கடந்த 19ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர். சென்னையில் மண்டலத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தம் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிவு விவரம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் ஓட்டப்படும். மேலும், ஒலி பெருக்கி மூலமும் அறிவிக்கப்படும்.
தபால் வாக்குகளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார்டிலும் குறைவான எண்ணிக்கையிலே இருக்கும் என்பதால் காலை 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் எண்ணி முடிக்கப்பட்டு விடும்.
முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரியவரும். அதேவேளையில் காலை 11 மணி முதல் வெற்றி பெற்றவர்கள் விவரம் ஒவ்வொன்றாக தெரிந்து விடும்.