• Tue. Mar 26th, 2024

தவறுதலாக பாகிஸ்தானுக்குள் ஏவுகணையை ஏவிய இந்தியா!

Mar 12, 2022

பாகிஸ்தானுக்குள் இவ்வாரம் தவறுதலாக ஏவுகணையொன்றை ஏவியதாக நேற்று இந்தியா தெரிவித்துள்ளது. வழமையான பராமரிப்பின்போது தொழில்நுட்படக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்ததாக இந்தியா கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்தியத் தூதரை பாகிஸ்தான் அழைத்த பின்னரே இக்கருத்து வெளிவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை வழமையான பராமரிப்பின் போது தொழில்நுட்பக் கோளறால் ஏவுகணையொன்றாக தவறுதலாக ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் இந்தியப் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுதமில்லாத ஏவுகணையானது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்திலிருந்து 500 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிழக்கு நகரான மியான் சன்னுவுக்கு அருகில் ஏவுகணை வீழ்ந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் ஏவுகணையானது அணுவாயுதத்தைக் காவிச் செல்லக்கூடிய ரஷ்ய, இந்தியக் கூட்டிணைப்பில் தயாரிக்கப்பட்ட தரைத் தாக்குதல் பிரமோஸ் ஏவுகணையாக இருக்கலாமென தன்னை அடையாளங்காட்ட விரும்பாத சிரேஷ்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

வட இந்திய நகரான சிர்ஸாவிலிருந்து புறப்பட்ட உயர் வேக பறக்கும் பொருளானது கிழக்கு பாகிஸ்தானில் வீழ்ந்ததாக பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளரொருவர், செய்தியாளர் மாநாடொன்றில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

40,000 அடி உயரத்தில், ஒலியின் மூன்று மடங்கு வேகத்தில் பாகிஸ்தானின் வான்பரப்பில் 124 கிலோ மீற்றர் குறித்த பொருள் பறந்ததாக பாகிஸ்தான் விமானப்படை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.