• Wed. Apr 24th, 2024

2 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா பேச்சு

Mar 25, 2022

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சீனப் படைகளை விரைவாகவும், முழுமையாகவும் விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளது.

டெல்லி சவுத் பிளாக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் எல்லைத் தகராறு குறித்து இருவரும் முதன்மையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான சிறப்புப் பிரதிநிதிகளாக இருவரும் உள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ சந்தித்துப் பேசினார். இரு நாட்டு வெளியுறவு அதிகாரிகள் பங்கேற்ற உயர்நிலைக் குழுக் கூட்டமும் நடைபெற்றது.

இதில் கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சீனப் படைகளை விரைவாகவும், முழுமையாகவும் விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் போரால் புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் இதில் பேசியதாகக் கூறப்படுகிறது.

அரசியல் மற்றும் ராணுவ நிலையிலான நேர்மறையான பேச்சுக்களைத் தொடர வேண்டியதன் தேவையை இருநாட்டு அதிகாரிகளும் வலியுறுத்தினர். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சீனாவுக்கு வரும்படி அந்நாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

உடனடியான சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், தான் சீனாவுக்கு வருவதாக அஜித் தோவல் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவ வீரர்களின் மோதலையடுத்து உறவு சீர்குலைந்த நிலையில் இரு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற முதல் உயர்நிலைப் பேச்சுவார்த்தை இதுவாகும்.