• Wed. Dec 4th, 2024

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நிராகரித்த இந்தியா

Feb 4, 2022

சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இது வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் ஒரே வீரராக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பீஜிங்கில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைக்கிறார்.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பங்கேற்ற சீனப்படை கமாண்டர் கியூ பபாவுக்கு குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை தொடர் ஓட்டமாக எடுத்து செல்லும் வாய்ப்பை சீனா வழங்கியது. சீனாவின் இந்த செயலால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்நிலையில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு விழாவை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், குளிர்கால ஒலிம்பிக் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.