• Thu. Mar 28th, 2024

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உதயசூரியன் வடிவில் நினைவிடம்

Aug 24, 2021

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உதயசூரியன் வடிவில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அமையுள்ள நினைவிடத்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக்குறைவால் கருணாநிதி காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டு திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.21 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது” என்றார்.

இந்நிலையில் சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுகிறது.

2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் உதயசூரியன் வடிவில் கருணாநிதியின் நினைவிடமும், அதன் முகப்பில் பேனா வடிவில் பிரம்மாண்ட தூணும் இடம்பெற்றுள்ளது.