• Sun. Sep 8th, 2024

என் பெற்றோர் விலங்குகள் அல்ல; மன்மோகன் சிங் மகள் கண்டனம்

Oct 16, 2021

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நலம் விசாரிக்க சென்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது தொடர்பான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தனது பெற்றோர் முதியவர்கள் என்றும் விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகள் அல்ல என்றும் மன்மோகன் சிங் மகள் தாமன் தீப் சிங் கூறியுள்ளார்.

உடல்நல பாதிப்பு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வியாழக்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன் சிங்கின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

மன்மோகன் சிங்கை நலம் விசாரித்தது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

மன்மோகன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை குலைக்கும் வகையில் இந்தபுகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சிமற்றும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்தப் புகைப்படங்களை அவர் நீக்கினார்.

இந்த புகைப்பட சர்ச்சை தொடர்பாக தி பிரிண்ட் ஊடகத்துக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங் மகள் தாமன் தீப் சிங், அமைச்சருடன் புகைப்படக்காரர் அறைக்குள் வந்ததுமே தனது தாயார் வருத்தமடைந்தார் என்றும் புகைப்படக் காரர் அறையை விட்டு வெளியேற வேண்டும் என்று தனது தாய் வலியுறுத்தியபோது அவரது வார்த்தைகள் புறந்தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அதோடு ‘எனது தாய் மிகவும் வருத்தத்தில் உள்ளார். அவர்கள் வயதானவர்கள். விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகள் அல்ல’ என்றும் தாமன் வேதனை தெரிவித்தார்.