கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 மற்றும் 12 திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்பவர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி கார்த்திக் மற்றும் கடற்படை கடலோர காவல்படை மீன்துறை, சுங்கத்துறை, உளவுத்துறை, அதிகாரிகளும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் பங்கு தந்தையரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரண்டு விசைப்படகுகளிலும், ஒரு நாட்டுப் படகிலும் 50 பக்தர்கள் சென்று கலந்து கொள்வது என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
11ஆம் திகதி காலை 10 மணிக்கு ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகுகள் புறப்படும் என்றும் இந்த பயணத்தில் அனுமதிக்கப்படாத யாரும் செல்லக் கூடாது என்றும் இதனை உளவுத்துறையும் கடற்படையும் கண்காணிப்பது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசு விதித்துள்ள சட்ட விதிகளின்படி இங்கிருந்து செல்லும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.