தமிழகத்தின் திண்டுக்கல் மாநகராட்சியில் சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து திரைப்பட பின்னணி பாடகர்களான செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதி பாடல்கள் பாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 90 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்தனர். இவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரைப்பட நடிகர், நடிகைகளும் பிரசாரங்களில் களம் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி 2வது வார்டில் சந்தோஷ் முத்து என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
தென்னை மரம் சின்னமாக ஒதுக்கப்பட்டள்ளது. நாட்டுப்புற பாடல்களில் பிரபலமாகி திரைப்பட பின்னணி பாடகர்களாக மாறியுள்ள செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியை அழைத்து வந்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுத்தினார்.
சந்தோஷ் முத்துவுக்கு ஆதரவாக தென்னை மர சின்னத்திற்கு பாடல் பாடி செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இவர்களுடன் தென்னை மர சின்னத்தை கையில் ஏந்தி ஏராளமானவர்கள் சென்றனர்.
இந்த சமயத்தில் பொதுமக்கள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இருவரும் திரைப்பட பாடல்கள் பாடியும் மகிழ்வித்தனர்.