• Tue. Mar 26th, 2024

இன்று இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை

Jan 12, 2022

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தி உள்ளன. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது.

எனினும் படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் பலனாக பாங்காங் ஏரிக்கரை மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து இரு தரப்பினரும் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.

இந்தநிலையில் இன்று(12) 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. சுசுல்-மோல்டோ எல்லையின் சீன பகுதியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பில் இந்தியா சார்பில் ராணுவ அதிகாரி அனிந்தியா செங்குப்தா தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் உள்ள ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது.

இதைத்தவிர தேஸ்பாங் பல்ஜ் மற்றும் டெம்சவுக் உள்ளிட்ட பிற சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிகாரிகளுடன் இன்று நடத்தப்படும் பேச்சுவார்த்தையில், எல்லையில் நீடித்து வரும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான உரையாடலை இந்தியா எதிர்நோக்குவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே கடந்த அக்டோபர் 10-ந்தேதி நடைபெற்ற 13-வது சுற்று பேச்சுவார்த்தை, எந்தவித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.