• Mon. Jul 22nd, 2024

இந்திய முப்படை தலைமை தளபதியின் மறைவு – உலக நாடுகள் இரங்கல்

Dec 9, 2021

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது மறைவுக்கு பாகிஸ்தான் ராணுவம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் பாபர் இப்திகார் கூறுகையில், ‘இந்தியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் தங்கள் விலைமதிப்பற்ற உயிரை இழந்திருப்பதற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இதைப்போல பல்வேறு உலக நாடுகளும் பிபின் ராவத் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளன. அந்தவகையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிபின் ராவத் அமெரிக்காவுக்கு ஒரு வலிமையான நண்பன் எனவும், இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை அவர் மேற்பார்வையிட்டு வந்தார் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலெய் குதாசேவ், ‘இந்தியா-ரஷியா இடையேயான சிறப்பான உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய ஒரு நெருங்கிய நண்பரை ரஷியா இழந்துவிட்டது. இந்த சோகமான நிகழ்வில் இந்தியாவுடன் இணைகிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதைப்போல இலங்கை பிரதமர் ராஜபக்சே, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ, ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரகம், பிரெஞ்சு தூதர், சிங்கப்பூர் தூதரகம், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சொலி, முனனாள் அதிபர், தைவான் வெளியுறவு அமைச்சகம், பூடான் பிரதமர் என பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உளளனர்.

இதைப்போல இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு நோபள பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.