• Wed. Oct 23rd, 2024

எரிவாயுக்கு எதிரான மனு இன்று ஆராய்வு

Dec 10, 2021

எரிவாயுக்கு எதிராக தாக்கல் ​செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று (10) ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதியரசர்களான பிரியந்த பெர்ணான்டோ (​தலைவர்) மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரியான தர நிலைகள் இல்லாமல் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டமையால் ஏற்படும் அபாயகரமான சம்பவங்கள் தொடர்பில், அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவக்குவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனுவில், குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களால் ஏற்பட்ட வெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்க நட்டஈடு செலுத்துமாறு லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சமையல் எரிவாயு பிரச்சினை குறித்து அரச நிறுவனங்களின் கவனயீனம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு தெரிவித்து, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட சமூகசெயற்பாட்டு குழுக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய, இலங்கை தர நிர்ணய சபை, நுகர்வோர் அதிகார சபை மற்றும் நுகர்​வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு
என்பன மனித உரிமைகள் ஆணைக்குழுவை நேற்று (9) சந்தித்திருந்தன.