• Sat. May 18th, 2024

வேறு நாடாக இருந்திருந்தால் பதவி விலகியிருப்பார்கள்; கெவிந்து குமாரதுங்க

Aug 12, 2021

கம்பஹா மாவட்டத்தில் கோவிட் தொற்றிய 7 ஆயிரத்து 3 நோயாளிகள் எவ்வித கண்காணிப்புமின்றி இருப்பதாக வெளியான செய்தி உண்மை என்றால், அரசாங்கமும், சுகாதாரத் துறையினரும் மக்களுக்குப் பொய் கூறியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேறு நாடாக இருந்திருக்குமாயின் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் பதவி விலகி இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவி விலகுவது எப்படி இருந்தாலும் இந்த விடயம் உண்மையாக இருந்தால், உண்மையை நாட்டுக்குக் கூறவேண்டும். அந்த உண்மைக்குப் பொருந்தும் வகையிலான நடவடிக்கை எடுக்குமாறு தான் அங்கம் வகிக்கும் அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கெவிந்து குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா மாவட்ட கோவிட் தடுப்பு குழுவின் கூட்டத்தில் அந்த மாவட்டத்தின் சுகாதார அதிகாரி ஒருவர் சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டார்.

ஒரு வாரத்தில் கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 555 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இவர்களில் 4 ஆயிரத்து 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 7003 பேர் எவரது கண்காணிப்பும் இன்றி வீடுகளில் இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறியிருந்தமை தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இதனை தெரிவித்தார்.