உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் உக்ரைனுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும்படி இந்திய பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். உக்ரைனில் ரஷியாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து கூறினேன்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உக்ரைனுக்கு அரசியல் ரீதியில் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளேன். ஆக்கிரமிப்பாளரை ஒன்றிணைந்து நிறுத்துவோம்’ என அவர் பதிவிட்டுள்ளார்