சுவீடனின் கரையோர பால்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, அப்பகுதியில் பெரிய மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று(13) அதிகாலை நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு பேர் கப்பலில் இருந்ததாக நம்பப்படுகிறது என்று சுவீடிஷ் கடல்சார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கவிழ்ந்த கரின் ஹோஜ் என்ற கப்பல் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றைய கப்பலுக்கு ஸ்காட் கேரியர் என்று பெயரிடப்பட்டது. விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
தெற்கு சுவீடிஷ் கடற்கரை நகரமான யஸ்டாட் மற்றும் டேனிஷ் தீவான போர்ன்ஹோல்ம் இடையே பால்டிக் கடலின் ஒரு பகுதியில் இந்த சம்பவம் நடந்தபோது கரின் ஹோஜ் கப்பலில் இரண்டு பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
சுவீடன் மற்றும் டென்மார்க்கில் இருந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் சுமார் 10 படகுகள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் இணைந்துள்ளதாக சுவீடிஷ் கடல்சார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதில் ஒரு கப்பல் 90மீட்டர் (295அடி) நீளமும் மற்றொன்று 55மீட்டர் நீளமும் கொண்டது என சுவீடிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.