• Tue. Feb 4th, 2025

ஆபரேசன் கங்கா : இதுவரை 907 இந்தியர்கள் மீட்பு

Feb 28, 2022

உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று முன்தினம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் சிறப்பு மீட்பு விமானம் மாலையில் மும்பை வந்து சேர்ந்தது. இவ்வாறு 4 விமானங்கள் மூலமாக இதுவரை 21 தமிழக மாணவர்கள் உள்பட 907 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பலர் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில் அவர்களையும் மீட்கும் விதமாக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 5 விமானங்கள் புகாரெஸ்டுக்கும், 2 விமானங்கள் புடாபெஸ்டுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளது. இந்திய தூதரகம் மூலம் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. முக்கிய பிரச்சனை எல்லையை கடப்பது. அனைத்து இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். உக்ரைனில் இன்னும் பல இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.