• Wed. Jul 24th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 11

Jun 11, 2021

கிரிகோரியன் ஆண்டின் 162 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 163 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 203 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது.

631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர்.

786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட கிளர்ச்சி அப்பாசியர்களால் நசுக்கப்பட்டது.

1011 – லொம்பார்டு கிளர்ச்சி: பாரியின் கிரேக்கக் குடிமக்கள் லோம்பார்டி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர்.

1488 – இசுக்கொட்லாந்து மன்னர் மூன்றாம் யேம்சிற்கும், கிளர்ச்சிப் பிரபுக்களுக்கும் இடையே இடம்பெற்ற சமரில் மன்னர் கொல்லப்பட்டார்.

1509 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் அரகொன் இளவரசி கேத்தரீனைத் திருமணம் புரிந்தார்.

1594 – எசுப்பானியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பு பிலிப்பீன்சின் உள்ளூர்ப் பெருங்குடிகள், மற்றும் அதிகாரிகளின் உரிமைகளையும் சலூகைகளையும் அங்கீகரித்ததன் மூலம், தனது ஆட்சியை அங்கு உறுதிப்படுத்திக் கொண்டார்.

1770 – பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் சென்ற கப்பல் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் தரை தட்டியது.

1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.

1805 – அமெரிக்காவின் மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1837 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.

1853 – இலங்கை, கொழும்பு நகரில் கொம்பனித் தெருவில் லசுக்காரின்களின் (உள்நாட்டுப் போர்வீரர்களின்) குடியிருப்பு மனைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.[1]

1895 – வரலாற்றில் முதலாவது தானுந்து ஓட்டப் பந்தயம் பாரிசில் நடைபெற்றது.

1898 – சீனாவில் சமூக, அரசியல் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நூறு நாள்கள் சீர்திருத்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டம் 104 நாட்களின் பின்னர் பேரரசி டோவாகர் சிக்சியினால் இடைநிறுத்தப்பட்டது.

1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

1903 – செர்பியாவில் அதிகாரிகள் குழு ஒன்று அரசர் மாளிகையைத் தாக்கி மன்னர் அலெக்சாந்தர் ஒப்ரெனோவிச்சையும், அரசி திராகாவையும் படுகொலை செய்தனர்.

1917 – கிரேக்க இராச்சியத்தின் மன்னராக அலெக்சாந்தர் முடி சூடினார்.

1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சி, அல்ப்பைனில் அறிமுகப்படுத்தினார்.

1937 – பெரும் துப்புரவாக்கம்: சோவியத் ஒன்றியத்தில் யோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துக்கு கடன்-ஒப்பந்தத்தில் நிவாரணம் வழங்க ஒப்புக் கொண்டது.

1955 – பிரான்சில் நடைபெற்ற தானுந்து ஓட்டப் பந்தயம் ஒன்றில் இரண்டு தானுந்துகள் மோதிக் கொண்டதில் 83 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 100 பேர் வரை காயமடந்தனர்.

1956 – 1956 கல்லோயா படுகொலைகள்: இலங்கையின் வடக்கே கல்லோயாவில் சிங்களக் குடியேற்றிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

1964 – இரண்டாம் உலகப் போர் வீரர் வால்ட்டர் சைஃபர்ட் செருமனியின் கோல்ன் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

1968 – உலகத் தமிழ்க் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.

1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் உயிரிழந்தனர்.

1991 – ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.

2002 – அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

2004 – நாசாவின் காசினி-ஐசென் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

2007 – கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் சிட்டகொங் நகரில் மண்சரிவு காரணமாக 130 பேர் உயிரிழந்தனர்.

2008 – கனடியப் பழங்குடியினரின் தங்கல் வசதிகள் உடைய பள்ளியில் இடம்பெற்ற முறைகேடுகளுக்காக கனடா பிரதமர் இசுட்டீவன் கார்ப்பர் கனடிய முதல் குடிமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

2010 – ஆப்பிரிக்காவில் முதலாவது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாயின.

2012 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு நிலச்சரிவை ஏற்படுத்தியதில் ஒரு கிராமமே மூழ்கியது, 80 பேர் உயிரிழந்தனர்.

2018 – அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பிற்கும், வட கொரியா தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.