• Fri. Jan 3rd, 2025

வரலாற்றில் இன்று செப்டம்பர் 16

Sep 16, 2021

செப்டம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 259 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 260 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 106 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

307 – மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார்.

681 – திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார்.

1732 – போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

1810 – மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.

1893 – அமெரிக்காவின் ஓக்லகோமா மாநிலத்தில் செரோக்கீ என்ற இடத்தில் விற்பனைக்கு விடப்பட்ட நிலப்பரப்புகளை வாங்குவதற்கு குடியேறிகள் பெருமளவில் திரண்டனர்.

1914 – முதலாம் உலகப் போர்: போலந்து மீதான தாக்குதல் ஆரம்பமானது.

1920 – நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்டிடத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தின் சிதி பரானி நகரைக் கைப்பற்றியது.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் ஆங்காங் மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.

1955 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவரைப் பதவியில் இருந்து அகற்ற அங்கு இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1956 – ஆத்திரேலியாவின் முதலாவது தொலைக்காட்சி சேவை டிசிஎன் ஆரம்பமானது.

1959 – முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1961 – சப்பான், ஒசாக்காவில் சூறாவளி நான்சி தாக்கியதில் 173 பேர் உயிரிழந்தனர்.

1961 – பாக்கித்தான் அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை நிறுவியது.

1963 – மலாயா கூட்டமைப்பு, சிங்கப்பூர், வடக்கு போர்ணியோவின் சபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது. ஆனாலும் சிங்கப்பூர் விரைவில் விலகி தனி நாடாகியது.

1970 – யோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் உசைன் இராணுவ ஆட்சியை அறிவித்தார்.

1975 – முதலாவது இடைமறித்துத் தாக்கும் போர் வானூர்தி மிக்-31 தனது முதல் பறப்பை மேற்கொண்டது.

1975 – கேப் வர்டி, மொசாம்பிக், சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.

1975 – பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1978 – ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.

1979 – கிழக்கு செருமனியில் இருந்து எட்டுப் பேர் வெங்காற்று மிதவையில் ஏறி மேற்கு செருமனிக்குத் தப்பிச் சென்றனர்.

1982 – லெபனானில் சப்ரா, சட்டீலா ஆகிய பாலத்தீன அகதி முகாங்களில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1987 – ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் அறிவிக்கப்பட்டது.

1990 – சீனாவுக்கும் கசக்ஸ்தானுக்கும் இடையே தொடருந்து சேவை ஆரம்பமானது.

1992 – பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு எதிரான போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கான விசாரணைகள் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவடைந்து,. அவருக்கு 40-ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1994 – சின் பெயின், மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது 1988 இல் விதிக்கப்பட்ட ஒலிபரப்புத் தடையை பிரித்தானிய அரசு விலக்கிக் கொண்டது.

2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.

2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.

2007 – தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்தனர்.

2013 – வாசிங்டன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.