• Thu. Nov 21st, 2024

இண்டிகோ விமான பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி – எதற்காக தெரியுமா?

Jun 24, 2021

இண்டிகோ விமான சேவை நிறுவனம் குறைந்தபட்சம் ஒரு தவணை கொவைட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குத்தான் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பயணிகள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்கள் இந்தியாவுக்குள் இருக்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையினால் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும்.

விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் சரிபார்ப்பு கவுன்ட்டரிலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் தேவைப்பட்டால் அவற்றை காட்ட வேண்டும். ஆரோக்கிய சேது செயலி மூலமும் அதைக் காண்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வருவாய்த் துறை அதிகாரி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.