சர்வதேச விதவைகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 23-ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை “invisible Women & Invisible Problems” என்னும் கருப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சமூகத்தில் கணவனை இழந்த கைம் பெண்கள் மறக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.
உலகளாவிய ரீதியில் கணவனை இழந்த பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் வெளியில் கூற முடியாத பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலானவர்கள் பலவிதமான துன்புறுத்தல்களுக்கு முகம் குடுக்க வேண்டிய நிலையில் உள்ளதுடன் வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கும் முகம் கொடுக்கின்றார்கள். பல பெண்கள் மறுமணம் செய்ய விரும்பாத
சூழ்நிலையில் சில பெண்கள் மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அவர்களும் சமூகத்தில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இந்த உலகத்தில் அனைவருக்கும் தாம் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ உரிமை இருக்கும் போது, ஏன் கணவனை இழந்த பெண்கள் தமக்கென ஒரு வாழ்க்கையை வாழ முடியாது? வாழ கூடாது?
உலகளாவிய ரீதியில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக பல கொள்கைகளை வகுக்கும் கொள்கை வகுப்பாளர்கள் விதவைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என்பதுடன், இதனால் 258 மில்லியனுக்கும் அதிகமான கணவனை இழந்த பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்பதை ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக்கொள்கிறது.
உலகில் இனம் மதம் பாகுபாடின்றி எல்லாப் பெண்களுமே தனது கணவர் இறக்கும் போது, அழுகை, மனச்சோர்வு, சோகம், விரக்தி போன்றவற்றிக்கு முகம் கொடுக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் சமூக பாகுபாடுகளை எதிர் கொள்கிறார்கள்.
குறிப்பாக ஆசிய நாடுகளில் பாரம்பரியம் மற்றும் கலாச்சார ரீதியாக கைம்பெண்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும் அவர்கள் மூலைக்குள் முடங்கி கிடக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கணவனை இழக்கும் போது அவர்களின் பொருளாதாரம் முடக்கப்படுகிறது. அதன் பின்பு அந்த பெண்களே குழந்தை வளர்ப்பு முதல் பொருளாதார தேவைகள் வரை கவனிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்கள். இதுவரை கணவனும் மனைவியும் இணைந்து செய்த அனைத்து கடமைகளும் இப்போது பெண் மாத்திரமே கவனிக்க வேண்டும். இழப்புகளின் வலி ஒரு புறம், பொறுப்புக்களின் சுமை ஒரு புறம் என அவள் தடுமாறித்தான் போகிறாள்.
சமூகம் அவளை பற்றி நினைப்பதே இல்லை. அவள் சாதாரணமாக தன்னை அலங்கரித்து கொண்டு வெளியே போனால் கூட புருஷன் இறந்து விட்டான் அவள் சிங்காரித்துக் கொண்டு வெளியே போவதை பார் என பெண்களே விமர்சிப்பதை காண முடியும். வெளியே போகும் போது நல்ல உடை உடுத்தி தலைவாரி தானே செல்ல முடியும். பல தேவைகள் கருதி பலருடன் பேசித் தானே ஆக வேண்டும். அதை கூட தவறான பார்வையில் பார்ப்பதும் ஏற்கனவே நொந்து நூலாகியிருக்கும் ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் வேதனைபடுத்தும் சமூக மூடப்
பழக்கவழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
விதவைகள் எதிர் நோக்கும் சவால்கள் பொருளாதார சிக்கல்கள் பற்றி ஒரு விழிப்புணர்வு உலகளாவிய ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை தனது 65-வது பொதுசபை அமர்வில் சர்வதேச விதவைகள் தினத்தின் A/ RES / 65/189 என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
விதவைகளை தீண்டத்தகாதவர்கள், அதிஷ்டம் அற்றவர்கள் என்கின்ற பாரம்பரியத்தை உடைத்தெறிவது மட்டுமல்ல, அவர்களும் சமூகத்தில் ஒருவர் என்கின்ற சமத்துவ நிலையை பேணவும், மற்றவர்களை போல அவர்களும் வாழும் உரிமையை கொண்டிருக்கிறார்கள் என்கின்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சர்வதேச தினம் முக்கியமானதாக அமைகிறது.
கணவனை இழந்து அவருக்காக அழுது கொண்டிருக்கும் பெண்கள் அதிலிருந்து வெளியேறி, தமது சொந்த காலில் நிற்கவும், சவால்களை எதிர் நோக்கும் தைரியத்தை பெற்றுக் கொள்ளவும் இந்த சமூகம் உதவ வேண்டிய அவசியத்தை இந்த தினம் உணர்த்தி நிற்கிறது. குறிப்பாக இந்த கொரோன பரவல் காலங்களில் அவர்கள் படும் இன்னல் அளப்பரியது.
சர்வதேச விதவைகள் தினத்தில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
அரசு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை கொண்டு வரலாம். எங்கள் சமூகத்தில் உள்ள கணவரை இழந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் நாம் உதவ முடியும்
அல்லது அதற்காக நிதி பங்களிப்பை வழங்க முடியும். நிதி திரட்டலில் கூட ஈடுபட முடியும் . விதவைகள் தொடர்பிலான சவால்கள் குறித்து கட்டுரைகளை எழுதலாம் அல்லது படித்ததை பகிர்ந்து கொள்ளலாம். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை பரப்பலாம். ஆகக் குறைந்தது ஒருவருக்கு இயன்ற உதவிகளை செய்யலாம்.
உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரை துடைக்கும் வகையிலும், சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை கொள்கைகளை ஆதரித்தும் , அவர்களது அனுசரணையோடும் பெண்கள் முன்னேற்றத்திற்க்கான நடவடிக்கைகளை சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு
முன்னெடுக்கிறது.
சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு மற்றும் சமூக முன்னேற்ற அமைப்பு யுனைடெட் கிங்டம் , இணைந்து நடத்தும் “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுத்து பெண்களை முன்னேற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்” என்ற தொடர் நிகழ்வுகளின் இரண்டாம் நிகழ்வாக “ மறக்கப்பட்ட பெண்கள் ,மறைக்கப்பட்ட இன்னல்கள்(Invisible Women, Invisible Problems” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு எதிர்வரும் ஜூன் 20,2021 ஞாயிறு மாலை 6:30(இந்திய , இலங்கை நேரம் ) காலை 9:00 (கனடா , அமெரிக்க நேரம்) இணையதள நிகழ்வாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்விற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமது ஆதரவை வழங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.
பெண் எழுத்துலக ஆளுமை மதிப்பிற்குரிய திருமதி.சிவசங்கரி அம்மா தலைமையில் உலகின் பல நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் ஆளுமை பெண்களும் கலந்து கருத்து பரிமாற்றம் செய்யவுள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கு பற்றி ஆதரவை வழங்க சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு தங்களை அன்புடன் அழைக்கிறது. இந்நிகழ்வு பல சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நேரலை
செய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ராஜி பாற்றர்சன்
President/CEO of IUWF