• Wed. Jun 12th, 2024

இலண்டனைச் சேர்ந்த தமிழ் பெண்புகைப்படக் கலைஞரின் சுயசரிதை!

Jul 13, 2021

வணக்கம், நான் மேனகா, மான்செஸ்டரை சார்ந்தவர். நான் மகப்பேறு, பிறந்த குழந்தை, குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளை படம் எடுக்கும் புகைப்படக் கலைஞர். என் படைப்புகளை மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ் மற்றும் பத்திரிகைகள் (ப்ரிட்டி லிட்டில் போசர் மாடல் இதழ் & இன்டர்நேஷனல்  கிட் மாடல் இதழ்) வெளியிட்டு விருதுகளை அளித்து பாராட்டி உள்ளனர். இதன் மூலம் நான் இந்த ஆண்டு மான்செஸ்டரில் சிறந்த குடும்ப புகைப்படக் கலைஞர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளேன்.

நான் ஒரு இயற்கை ஒளி புகைப்படக் கலைஞர்,  படப்பிடிப்பின் போது செயற்கை ஒளியைப் பயன்படுத்துவதில்லை. நான் எனது வாடிக்கையாளர்களை நண்பர்களாக நினைக்கிறேன். அவர்களின் வாழ்க்கை முறையை நான் புரிந்து, அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் சிறந்த புகைப்படங்களை தருகிறேன்.

போட்டோஷூட்கள், என் வாடிக்கையாளர்களின் ஆனந்த உணர்வு மட்டுமல்ல, அது என்னுடையதும் கூட. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக வைத்திருக்கும் அன்பையும், மகிழ்ச்சியையும், அக்கறையையும் பதிவு செய்வதை நான் எப்போதும் நேசிக்கிறேன், ரசிக்கிறேன். எனது கேமராவில் உள்ள ஷட்டரை மட்டும் நான் கிளிக் செய்யவில்லை, அவர்களின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் எனது புகைப்படம் மூலம் வெளிப்படுதுகிறேன்.

நான் விரும்பியதைச் செய்ய முடிந்ததற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது உண்மையில் ஒரு சிறந்த உணர்வு. அவர்கள் எப்போதும் மதிக்கவும் மகிழவும் விரும்பும் சிறந்த நினைவுகளை அவர்களுக்கு வழங்குவதே எனது குறிக்கோள். நான் யதார்த்தமான புகைப்படங்களை கொடுக்க விரும்புகிறேன். அவற்றை நான் மிகவும் எளிமையாகவும், எளிதாகவும், வேடிக்கையாகவும் சிறப்பாகவும் வைத்திருக்க விரும்புகிறேன். அவற்றின் மீது எனது கவனத்தையும் அக்கறையையும் செலுத்துகிறேன்.

புகைப்படங்களுக்கான என் ஆர்வம் என் அப்பாவிடமிருந்து வந்தது. அப்பா எங்கள் புகைப்படங்களை மிகவும் ஆர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் எடுப்பார். அவர் எங்களுக்கு போஸ் மற்றும் கோணங்களை சொல்லிக்கொடுப்பார். அப்பா எங்களுடைய புகைப்படங்களை எடுத்து ஒரு ஸ்டுடியோவில் அச்சிடுவது வழக்கம். ஆல்பங்களைப் பார்க்கும் அந்த தருணங்கள், அவை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். நாங்கள் ஆல்பங்களைப் பார்த்தபடி அம்மா எல்லா காட்சிகளையும் விவரிப்பார். அம்மா தனது உறவினர்களையோ நண்பர்களையோ நினைவுகூரும்போது, ​​அந்த புகைப்படங்களைப் பார்த்து அவர்களின் கதைகளை எங்களிடம் சொல்வார். இதுபோன்ற தருணங்களில் புகைப்படம் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்.  இதுவல்லவா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும், நாம் கடந்து செல்லும் வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதற்கான ஒரே வழி?  இதுதான் எப்போதும் முடிந்தவரை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்தை அதிகரித்தன.

திருமணத்திற்குப் பிறகு, நான் இங்கிலாந்துக்கு வந்தபோது, ​​நான் முதலில் எடுத்துவைத்தது எனது புகைப்பட ஆல்பங்களைத்தான். டிஜிட்டல் உலகம் பரிணமிப்பதற்கு முன்பு என்னிடம் பல ஆல்பங்கள் இருந்தன. என் கணவர் எங்களுக்கு எடுத்துச் செல்ல மற்ற விஷயங்கள் வேண்டும் என, ஆல்பங்களை அனைத்து எடுத்துவைக்க வேண்டாம் என்று என்னிடம் கூறினார். பின்னர் நான் எனது ஆல்பங்களைப் பிரித்து, எனக்கு மிகவும் பொக்கிஷமானவற்றை முதலில் கொண்டு வந்தேன். ஒவ்வொரு முறையும் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, ​​மீதமுள்ளவற்றைக் கொண்டு வந்தேன். என்னிடம் அனைத்து டிஜிட்டல் நகல்களும் உள்ளன. அதிர்ஷ்டவசமாக என் கணவரும் புகைப்படங்களை மிகவும் மதிக்கும் ஒரு நபர், அவரே ஒரு நல்ல புகைப்பட கலைஞர். அவரிடம் ஒரு டி.எஸ்.எல்.ஆர் கேமரா இருந்தது, நாங்கள் பயணங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அதைப் பயன்படுத்தினேன். புகைப்பட உலகத்தைப் பற்றி நான் அதிகம் ஆராயத் தொடங்கிய நேரம் அது. இது ஷட்டரைக் கிளிக் செய்வது மட்டுமல்ல, அது ஒரு நுட்பமாகும் என்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த நேரத்தில், நான் எடிட்டிங் பற்றி யோசிக்கவில்லை. ஏனென்றால் புகைப்படம் எடுப்பதில் பல வகைகள் உள்ளன. அதில் உள்ள நுட்பங்களைப் புரிந்துகொள்வது என் முன்னுரிமை மற்றும் என் ஆர்வமாக இருந்தது. எனவே, நான் இயற்கை புகைப்படம் எடுத்தல், உணவு புகைப்படம் எடுத்தல் (ஆமாம் நான் சில உணவு பிளாக்கிங் செய்துள்ளேன்) ப்ரொடக்ட்  புகைப்படம் மற்றும் மக்கள் புகைப்படம் ஆகியவற்றை முயற்சித்தேன்.

நான் எனது முதல் குழந்தையைப் பெற்றபோது, ​​முழு நேரமும் கேமராவின் பின்னால் இருப்பவராக இருக்க ஆரம்பித்தேன். எனது குழந்தையின் ஒவ்வொரு சிறிய செயலையும் மைல்கலையும் ஆவணப்படுத்த விரும்பினேன். எடிட்டிங் நுட்பங்களைப் பற்றி நான் கற்றுக்கொள்ளத் தொடங்கியது அப்போதுதான். இது புகைப்படம் எடுத்தல் போன்ற மற்றொரு பெரிய பாடமாகும். எனது இரண்டாவது குழந்தையைப் பெற்றபோது, ​​இரு குழந்தைகளிடமும் கவனம் செலுத்துவதும் ஆவணப்படுத்துவதும் கடினமாக இருந்தது. அப்போதும் கூட நான் என் குழந்தைகள் இருவரையும் சமமாக ஆவணப்படுத்தினேன். எனது கணவர் புகைப்படம் எடுப்பதில் எனக்குள்ள ஆர்வத்தைக் கண்டு சில புகைப்பட படிப்புகளை எனக்கு பரிசளித்தார். அது எனக்கு ஆழமான அறிவைக் கொடுத்தது. புகைப்படம் எடுப்பதற்கும், எடிட்டிங் செய்வதற்கும் என் ஆர்வம் என் குழந்தைகளைப் பற்றி மட்டுமல்லாமல், என் சகோதரியின் குழந்தைகள் மீதும் என் நண்பரின் குழந்தைகள் மீதும் இருந்தது. நான் அவர்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் புகைப்படத்தை எடுத்து, எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அவர்களுக்கு டிஜிட்டல் நகல்களாக அனுப்புவேன். என் பெற்றோர், என் சகோதரி மற்றும் எனது நண்பர்கள் சிலர் அவற்றை அச்சிட்டு சுவரில் கட்டமைத்தனர். அப்போதுதான் எனக்கு மற்றவர்களுக்காக புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகரித்தது.

வாய் வார்த்தை மூலம் 2019 ஆம் ஆண்டில் மற்ற குடும்பங்களை புகைப்படம் எடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 2020 ஆம் ஆண்டில் குழந்தைகள் வீட்டில் இருந்தபோது முழுநேரமும் வீட்டிலிருந்து வேலை செய்ததால் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. புகைப்படம் எடுத்தல் மட்டுமே எனக்கு ஆனந்தத்தை அளித்தது. அதில் நான் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் எனது முழுநேர வேலையை விட்டுவிட்டு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினேன்.

அந்த வருடம் 2020 ஆம் ஆண்டில் என்னுடைய ஒரு சாதாரண புகைப்படம் வைரலாகி மான்செஸ்டர் ஈவினிங் நியூஸில் வெளியிடப்பட்டது. அப்போதுதான் வெளியீடுகள், அம்சங்கள் மற்றும் விருதுகள் தொடங்கியது. அப்போது நான் 4 விருதுகளை வென்று இங்கிலாந்து பத்திரிகையில் இரண்டு முறை எனது படைப்புகள் வெளியிடப்பட்டு சிறந்த இடத்தை அடைந்தேன். எனது புகைப்படங்களில் ஒன்றிலிருந்து வீட்டுக்கல்வி செய்யும் குழந்தைகளின் புகைப்படம் ‘லெஜண்டரி அவார்டு 2020’ பெற்றது. பின்னர் ‘ஃபால் அவார்டு’, ‘விண்டேர் அவார்டு 2020 ‘, ‘ட்ரேஸுர் அவார்டு, ‘டாப் ஷாட் அவார்டு 21’, ‘ஸ்ப்ரிங் 21 அவார்டு, ‘ஹிட்டிடேன் ஜெம் அவார்டு’ மற்றும் ‘டாப்  10 கிரேட்டிவ்  காம்போசிட் ஆர்ட்  அவார்டு’ இரண்டு முறை பெற்றுளேன்.  எனவே  2020 ஆண்டு எனக்கு மிகவும் சிறப்புமிக்க ஆண்டாக வாய்ந்தது.

தற்போது, மான்செஸ்டரில் சிறந்த குடும்ப புகைப்படக் கலைஞர்களில் ஒருவராக நான் பியர்ஸ்பேஸில் இடம்பெற்றுள்ளேன். ஒரு தமிழ் பெண்ணாக, எனது உற்சாகமான வாழ்க்கையைத் தொடங்கி, குறுகிய காலத்தில் சிறந்த தொழில் ஆர்வலர்களில் ஒருவராக இடம்பெறுவது நிச்சயமாக எனக்கு ஒரு பெரிய சாதனையே! கடின உழைப்பு அனைத்தும் மனநிறைவையும் ஆனந்தத்தையும் அளிக்கின்றன!

எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனது அனைத்து வாடிக்கையாளர்களின்  அன்பு, நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் நான் மிகவும் கடமை பட்டுளேன்!

கடவுளின் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி!

மேனகாவின் புகைப்படங்கள் சில: